தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம்
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில் சாரதாதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையம் உள்ளது. இதில் விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் பேசும் போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால், ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைகளை ரத்து செய்திட வேண்டும். நீட், சி.யூ.டி.இ. தேர்வுகளை உடனே ரத்து செய்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் (உதவி பெறும் பள்ளிகள்) ராஜா உள்பட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.