அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் ஆனார் - சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு


அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் ஆனார் - சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
x

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை,

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கட்சி தலைவர் ஜி.கே.மணி அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகள் நான் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தமிழக அரசியலில் கட்சியை ஆட்சி பொறுப்புக்கு அழைத்து செல்லும் வகையிலும், 'பா.ம.க. 2.0' என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையிலும் கட்சி தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் இந்த பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருந்தது. அதன்படி இந்த சிறப்பு பொதுக்குழு பா.ம.க.வின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாசை ஒருமனதாக தேர்வு செய்கிறது.

இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

பின்னர் கட்சியின் புதிய தலைவர் அன்புமணி ராமதாசிடம், ஜி.கே.மணி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகளிடம் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார். அப்போது திரண்டிருந்த பா.ம.க.வினர் எழுப்பிய வாழ்த்து-வரவேற்பு கோஷம் அரங்கை அதிர செய்வதாக இருந்தது.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்' என்பது திருக்குறள். ஆனால் தாயுள்ளத்தோடு, தகப்பனாக நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த மண் பயனுற வேண்டும். மக்கள் வாழ்வு முன்னேற வேண்டும் என்பதே பா.ம.க.வின் கொள்கை. அந்த கொள்கையை மேலும் வலுப்படுத்திட தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றத்துக்கான, ஒரு நல்லாட்சிக்கான புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு பிறகு மக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும். 2026-ம் ஆண்டில் அந்த மாற்றத்தை தமிழக மக்கள் உருவாக்கி காட்டுவார்கள். தமிழக மக்கள் அனைவரும் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள். அதில் சந்தேகமே இல்லை.

இயக்கம் என்றால் இயங்குவதுதான். எனவே கோஷ்டி பூசல் உள்ளிட்டவற்றை கடந்து கட்சிக்காக பாடுபடுங்கள். தி.மு.க.வை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கட்சி போஸ்டர்களில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது நம்மிடம் இல்லாதது வருத்தம். கட்சி நிர்வாகிகள் ரியல் எஸ்டேட்டில் காட்டும் கவனத்தை கட்சி வாக்குவங்கிக்காக செலுத்தாதது ஏன்?. வேலை செய்யமுடியாத உங்களுக்கு எதற்கு அந்த பதவி?. எனவே புதிய தலைமை அமைந்திருக்கிறது. அனைவரும் ஒருசேர கட்சி முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பொதுச்செயலாளர் ராவணன் வடிவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் நன்றி கூறினார்.

முன்னதாக பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் கல்வி-வேலைவாய்ப்புக்கான வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை சட்டமன்றத்தை கூட்டி தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், 'நீட்' விலக்கு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதலை அடுத்த 2 மாதங்களில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும், மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும், தமிழக அரசு பணிகள் முழுவதையும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மானியம் வழங்கவேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story