பூரண மதுவிலக்கு தொடர்பாகஅரசின் நிலைப்பாட்டை முதல்-அமைச்சர்தெளிவுப்படுத்த வேண்டும்டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பூரண மதுவிலக்கு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
குடிநீர் திட்டம்
தர்மபுரியில் நேற்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வரவில்லை.
கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி ஆற்றில் இருந்து 500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் 3 டி.எம்.சி. தண்ணீரை தான் தர்மபுரி மாவட்ட மக்களுக்காக கேட்கிறோம்.
தர்மபுரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட புளோரோசிஸ் பாதிப்பை தடுக்க ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஒகேனக்கல் குடிநீர் சாதாரண குடிநீருடன் கலந்து வழங்கப்படுவதால் புளோரோசிஸ் பாதிப்பு தொடர்கிறது. இதற்கு தீர்வு காண ஒகேனக்கல் 2-ம் கட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
சிப்காட் தொழிற்பேட்டை
தர்மபுரி- மொரப்பூர் ரெயில் பாதை திட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இதற்கான பணியை விரைவுப்படுத்த வேண்டும்.
பஞ்சப்பள்ளியில் அணையில் இருந்து தர்மபுரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய் இதுவரை தூர்வாரப்படவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இந்த தூர்வாரும் பணியில் நானும் பங்கேற்க உள்ளேன்.
தெளிவுப்படுத்த வேண்டும்
தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துகளால் ஆண்டுக்கு 70 முதல் 80 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த சாலை சீரமைப்பு தொடர்பாக விரைவில் மத்திய போக்குவரத்து மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். தி.மு.க.வை தொடங்கிய அண்ணா பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சில மதுக்கடைகளை மூடினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இதுவரை ஒரு மதுக்கடையை கூட மூடவில்லை. பூரண மதுவிலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தால் 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். சட்டசபையில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட வேண்டும்.
நம்பிக்கை இல்லை
ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லாத இடைத்தேர்தல் மீது பா.ம.க.விற்கு நம்பிக்கை இல்லை. ஈரோடு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசின் நிர்வாகம் ஒரு மாத காலம் ஸ்தம்பிக்கும். இந்த இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.