ஆஸ்கர் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
மேலும் சிறந்த பாடலுக்கான விருதை டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள்!
ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரிப்பதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பொம்மன் - பெள்ளி இணையரின் தியாகம் போற்றத்தக்கது. இப்போதும் கூட தருமபுரியில் அண்மையில் இறந்த 3 யானைகளின் குட்டிகளை தேடும் பணியில் பொம்மன் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கு பாராட்டுகள்!" என்று கூறியுள்ளார்.