மோசமான வானிலையால் அந்தமான் விமானம் சென்னை திரும்பியது - பயணிகள் வாக்குவாதம்


மோசமான வானிலையால் அந்தமான் விமானம் சென்னை திரும்பியது - பயணிகள் வாக்குவாதம்
x

அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலையால் மீண்டும் சென்னை திரும்பியது. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 177 பயணிகளுடன் அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்தமானை நெருங்கியபோது அங்கு தரைக்காற்று வீச தொடங்கியதால் மோசமான வானிலை நிலவியது.

அந்தமானில் வழக்கமாக மாலை 4 மணிக்கு மேல்தான் தரைக்காற்று வீச தொடங்கும். அந்த நேரத்தில் அந்தமானில் இருந்து விமானங்கள் புறப்படவோ, தரை இறங்கவோ அனுமதி கிடையாது. ஆனால் தரைக்காற்று பிற்பகலிலேயே வீச தொடங்கியதால் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானத்தால் அங்கு தரை இறங்க முடியவில்லை. இதனால் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். பின்னர் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக்கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. பின்னர் அந்தமான் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் நாளை(அதாவது இன்று) விமானம் அந்தமான் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் உள்ள அந்த விமான நிறுவன கவுண்ட்டரை சூழ்ந்து கொண்டு அந்தமான் செல்லும் மற்ற விமானங்கள் வழக்கம் போல் அந்தமானில் தரை இறங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு வருகிறது. ஆனால் எப்படி மோசமான வானிலை என்று கூறுகிறீர்கள்? என கேட்டு விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு நலன் கருதி மோசமான வானிலை காரணமாக தரை இறக்காமல் விமானம் திரும்பி வந்து விட்டது. மீண்டும் அந்தமானுக்கு நாளை(அதாவது இன்று) காலை அழைத்து செல்கிறோம் என்று கூறி பயணிகளை சமாதானம் செய்தனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story