சாலை விரிவாக்கத்தின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் ஆத்திரம்: பொதுமக்கள் மறியல்


சாலை விரிவாக்கத்தின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் ஆத்திரம்: பொதுமக்கள் மறியல்
x

நொய்யல் அருகே சாலை விரிவாக்கத்தின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சாலை விரிவாக்க பணி

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலை முதல் வேலாயுதம்பாளையம் வரை நெடுகிலும் தார் சாலை ேசதமடைந்துள்ளது.அந்த தார் சாலையை சீரமைக்கும் வகையில் தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி பறிக்கப்பட்டதால் வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து விட்டது.

இதன் காரணமாக சுமார் 2 மாதங்களாக மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மறியல்

இந்நிலையில் தார் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து விட்டதன் காரணமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் பறிக்கப்பட்ட குழியில் செயற்கை மணலுடன் ஜல்லியை கலந்து போடப்பட்டு தார் சாலையை நிரப்பி விட்டதால் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதிதாக குடிநீர் குழாயை பதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இதனால் ஊராட்சி நிர்வாகம் புதிய குழாய் பதிக்க முடியவில்லை என கூறியும், குடிநீர் வசதி கேட்டும் அதியமான் கோட்டையை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் சேமங்கி புங்கோடை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு

இதுகுறித்து வேட்டமங்கலம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த மணி (வயது 39), முருகேசன் (42), பிரபு (38), பாக்கியராஜ் (42), கணேசன் (44) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story