அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்


அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்
x

‘ஹெல்த் மிக்ஸ்’ குறித்து தவறான கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று கோவையில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

'ஹெல்த் மிக்ஸ்' குறித்து தவறான கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று கோவையில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

அமைச்சர் நாசர் ஆய்வு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் அவர் மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து களஆய்வு நடத்தினார். தொடர்ந்து மதுக்கரையில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

இதையடுத்து ஆர்.எஸ்.புரம் ஆவின் பால் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார். பின்னர் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் ஆவின் விற்பனை நிலையங்களை தொடங்கி வருகிறோம். கோவை மாநகரத்தில் ரூ.1 கோடியில் ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பால் விலையை குறைத்ததால் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த ஆட்சியின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய பால் பண்ணை

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோவை ஆவினில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் சிக்கிய நபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

மேலும், ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது வழக்கு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் கருத்து தெரிவிக்கலாம். ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது.

ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்க சாத்தியம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரூ.77 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நாசர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டார்.


Next Story