ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல் - இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலி


ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல் - இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலி
x

ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியது. இதில் இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலியானார்.

சென்னை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த அனுமன் பேட்டை வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 28). கன்டெய்னர் லாரி டிரைவரான இவர், நேற்று அதிகாலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கார் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

ஆவடியை அடுத்த வெள்ளானூர் ஆர்ச் அந்தோணி நகர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து ரப்பர் பொருட்களை ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி சாலையின் வலதுபுற ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்பகுதியில் இருட்டாக இருந்ததாலும், மின்விளக்கு எரியாததாலும் சாலையில் கன்டெய்னர் லாரி நிறுத்தி இருப்பது டிரைவர் ஜோதிக்கு தெரியவில்லை. வேகமாக வந்த அவர், அருகில் வந்தபிறகுதான் அங்கு சாலையின் முன்புறம் மற்றொரு கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லாரியை இடதுபுறமாக திருப்பினார். ஆனால் அதற்குள் முன்னால் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முன்னால் நின்றிருந்த கன்டெய்னர் லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

மேலும் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதியதால் ஜோதி ஓட்டிவந்த கன்ெடய்னர் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கியதில் வயிறு, மார்பு, கால், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த ஜோதி, டிரைவர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் பலியான ஜோதி உடலை இடிபாட்டில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை அஜாக்கிரதையாக சாலையின் வலதுபுறம் நிறுத்திவிட்டு சென்ற டிரைவரான நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாரிகுட்டி (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story