ரேஷன் கடைகளில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக விலை இல்லாத அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சிலர் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அடிக்கடி இவ்வாறு கடத்தி செல்லப்படும் ரேஷன் அரிசி மூடைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி பறிமுதல் செய்கின்றனர். அத்துடன் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அடிக்கடி நடக்கும் இது போன்ற சம்பவங்களை தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா, ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்பதை இந்த மாதம் முதல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி சரி பார்த்து வருகின்றனர்.
ஆய்வு
தற்போது முதல் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை தொடங்கி உள்ளனர். இதன் அடிப்படையில் திருப்புவனத்தில் உள்ள 3 ரேஷன் கடைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
அவர்கள் ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சரியாக உள்ளதா என்றும், பொதுமக்களுக்கு பொருட்கள் எவ்வளவு வழங்கப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள், ரேஷன் கடை பில்லில் குறிப்பிட்ட அளவு பொதுமக்கள் வாங்கி உள்ளார்களா என்றும் சோதனை செய்ய உள்ளதாக கூறினர்.