ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை : மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்கு


ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை : மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்கு
x

ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் காவல் எல்லைக்கு உட்பட்ட பழவேற்காடு பகுதியை சேர்ந்த ஆண்டிக்குப்பத்தில் வசித்து வருபவர்கள் சங்கர், செல்வம். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதே கிராமத்தை சேர்ந்த ராஜா, தவமணி என்ற மற்றொரு தரப்பினருக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்சினை எழுந்தது. அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருதரப்பு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மோதலில் பல வீடுகள் சூறையாடப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார், வருவாய் அதிகாரிகளும் பழவேற்காட்டில் முகாமிட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க பென்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அமைதி சூழல் நிலவும் வரை இந்த தடை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு தரப்பு பெண்கள், மற்ற தரப்பினரை திட்டுவதாக கூறி ராஜா, தவமணி தரப்பினை சேர்ந்த பெண்கள் 50 பேர் நேற்று காலை பழவேற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story