1,083 காலி இடங்களுக்கு அடுத்த மாதம் 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சார்நிலை பதவிகளுக்கான 1,083 காலி இடங்களுக்கு அடுத்த மாதம் 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சென்னை,
ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சார்நிலை பதவிகளும், ஊரக வளர்ச்சித் துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் ஆகியவற்றில் 794 இடங்கள், நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகளில் 254 இளநிலை வரை தொழில் அலுவலர் இடங்கள், நகர் ஊரமைப்பு துறையில் 10 வரைவாளர் நிலை இடங்கள், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்துறையில் 25 போர்மென் இடங்கள் என மொத்தம் 1,083 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வருகிற மே மாதம் 27-ந்தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தி இருக்கிறது. விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.