சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்


சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்
x

சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்புக்கான உறுப்பினர்களை நியமனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சென்னை

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி, பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டாலும், அது செயல்படாத நிலையிலேயே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறை அந்த மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்து புதிய கோணத்தில், பள்ளிகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள குழுவில் 20 உறுப்பினர்கள் இடம்பெற இருக்கின்றனர். தலைவர், துணைத்தலைவர் என பதவிகளும், உறுப்பினர்களும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குழுவில் பெரும்பாலும், அதாவது 75 சதவீதம் அந்தந்த பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரே இருக்கும் வகையிலும், அதிலும் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலும் கல்வித்துறை அறிவுறுத்தியது.

அதன்படியே, சென்னையில் 103 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்புக்கான உறுப்பினர்களை நியமனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மை குழுவுக்கு என்று 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதிக எண்ணிக்கையில் பெற்றோர் ஆதரவை பெறும் நபரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டனர். இந்த மேலாண்மைகுழு உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவார்கள்.

அரசு பள்ளிகள் நிர்வாகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு முக்கிய பங்கு இருந்தாலும், உள்ளூர் மக்கள் அந்தபள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் போது, அந்த பள்ளிகள் இன்னும் மேம்படும் வகையில் இந்த குழுவுக்கு ஒரு பாலமாக இருந்து செயல்படுவதோடு, பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் பங்களிப்பும் இந்த குழுவுக்கு உள்ளது. இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் நடந்து வருகின்றன.


Next Story