பெண் தவறவிட்ட நகைப்பையை ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
வேலூர் கொணவட்டத்தில் ஆட்டோவில் சென்றபோது பெண் தவறவிட்ட நகைப்பையை ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேலூர் கொணவட்டம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து பை ஒன்று கீழே விழுந்தது.
இதனை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முள்ளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், அவருடைய நண்பர் அறிவழகன் ஆகியோர் எடுத்தனர்.
பின்னர் அதனை அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று ஒப்படைக்க முயன்றனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆட்டோவை தவற விட்டனர். இதையடுத்து 2 பேரும் அந்த பையை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் பையை திறந்து பார்த்தபோது அதில், ரூ.85 ஆயிரம் ெராக்கம், கம்மல், மோதிரம், கால்செயின், வெள்ளிக்கொலுசு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், துணிகள் இருந்தன.
இதையடுத்து வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் இருந்த செல்போன் எண்ணை சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தொடர்பு கொண்டு விசாரித்தார்.
அதில், அவர் ஆம்பூர் புதுமண்டி பகுதியை சேர்ந்த அசோக் மனைவி நிவேதா என்பதும், வேலூரில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் செல்லும்போது பையை தவறவிட்டதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் நிவேதா போலீஸ் நிலையம் சென்று பையில் இருந்த பணம், நகைகளை சரிபார்த்து பெற்றுக் கொண்டார்.
பையை போலீசில் ஒப்படைத்த 2 பேருக்கும், போலீசாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பையை ஒப்படைத்தை இருவருக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.