நெருங்கி வரும் மிக்ஜம் புயல்: கட்டுப்பாட்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


நெருங்கி வரும் மிக்ஜம் புயல்: கட்டுப்பாட்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்' என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

முன்னதாக சேப்பாக்கம், அவ்வை சண்முகம் சாலை, ஜானி ஜான் கான் சாலை, டிரிப்ளிகேன் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


Next Story