அரணாரை ஏரியில் மீன் பிடி திருவிழா


அரணாரை ஏரியில் மீன் பிடி திருவிழா
x

அரணாரை ஏரியில் மீன் பிடி திருவிழா நடந்தது.

பெரம்பலூர்

மீன் பிடி திருவிழா

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் நீலியம்மன், செல்லியம்மன் கோவில் அருகே ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வருகிறது. விவசாயிகள் இந்த ஏரி தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு, தண்ணீர் குறைந்தவுடன் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் வற்றாததால் மீன் பிடி திருவிழா நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் ஏரியில் தண்ணீர் வற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

அதிக எடையுள்ள மீன்கள்

நேற்று காலை 10 மணியளவில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் அரணாரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மீன் பிடிப்பவர்கள் ஆர்வத்துடன் ஏரியில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர்.

ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே அதிக எடையுள்ள மீன்கள் கிடைத்தன. அதிலும் விரால், கெண்டை, கெழுத்தி, உளுவை உள்ளிட்ட மீன்களும் கிடைத்தன. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்றதை காண முடிந்தது.


Next Story