விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?


விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா? நடைபயிற்சி செய்வோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

தெருநாய் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சினையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய பிரச்சினையாகவே உருமாறி இருக்கிறது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அபரிமிதமான இனப்பெருக்கம்

தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதத்திலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் போடும். இதனால் நாய்கள் இனப்பெருக்கம் அபரிதமிமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. காலப்போக்கில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் நாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்கள் பிடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு அச்சுறுத்தல்

தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை, தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.

அதன்படி கடற்கரைகள், பூங்காக்கள், சாலையோர பகுதிகள் போன்ற இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான விலையுயர்ந்த நாய்களையும் நடைபயிற்சியின்போது உடன் அழைத்து வருகிறார்கள். அப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்கு வருவோருக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்களால் அச்சுறுத்தல் என்று ஒருபுறம் பொதுமக்களும், தெருநாய்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் இன்னொரு புறமும் புகார் அளிக்கச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் விருதுநகர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து அன்றாடம் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

அறுவை சிகிச்சை மையம்

சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்:-

சிவகாசி மாநகராட்சியில் எங்கும் இல்லாத அளவிற்கு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் நாய்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வசதிகள் இருந்தும் அதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட வில்லை. விஸ்வநத்தம் பகுதியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மையம் திறக்கப்பட்டது. தற்போது அந்த மையம் சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது. அதேபோல் நாய்களை பிடிக்க வாங்கிய வாகனம் பழைய நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. சிவகாசி பகுதியில் நடை பயிற்சி செய்ய அரசுக்கு சொந்தமான இடங்கள் ஏதுமில்லை. அதனால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள பெரும்பாலானவர்கள் பொது போக்குவரத்து உள்ள சாலைகளில் தான் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் தெருநாய்களின் துரத்தல், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நடை பயிற்சி செய்பவர்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. சிலர் நடை பயிற்சியை தவிர்க்கும் நிலைக்கும் செல்கிறார்கள். எனவே இது போன்ற பிரச்சினைகளில் இருந்து பொதுமக்கள் விடுபட தெருநாய்களை கட்டுப்படுத்தவும், அகற்றவும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயமுறுத்தல்

தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி:-

நாங்கள் தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் ரோட்டில் தினமும் 2 கி.மீ. தூரம் அதிகாலை 5 மணி அளவில் 5 பேர் கொண்ட குழுவாக நடை பயிற்சி சென்று வருகிறோம். அதிகாலையில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அவ்வப்போது பயமுறுத்தும். தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்று வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபயணம் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை திருடியதால் பயம் காரணமாக நடைபயணம் வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆகையால் தாயில்பட்டி கிராமத்தின் மையத்தில் நடைபயிற்சி செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

விருதுநகரை சேர்ந்த டாக்டர் ரத்தினவேல்:-

நடைபயிற்சிக்கு செல்லும் போது வளர்ப்பு நாயை உடன் அழைத்து சென்றால் தெருக்களில் உள்ள நாய்கள் பிரச்சினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. தெருக்களில் உள்ள நாய்கள் மிரட்டும் நிலையால் நடை பயிற்சிக்கு செல்ல தயக்கம் ஏற்படும் நிலையும் உள்ளது. இது அனைவரின் உடல் நலன் சார்ந்த விஷயமாகும்.

ப்ளூ கிராஸ் அமைப்பின் முயற்சியால் கருத்தடை செய்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் இந்த நடைமுறையை முறையாக அமல்படுத்தாத நிலையில் நடைபயிற்சி செல்வோருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்த தயாராக இல்லை. எனவே இதுகுறித்து பிராணிகள் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள ப்ளூ கிராஸ் அமைப்பும், மத்திய அரசும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், உடல் நலன் சார்ந்த பிரச்சினை உள்ளதால் மதிய சுகாதாரத்துறை அமைச்சகமும் இது குறித்து ஆய்வு செய்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கடுமையான சட்டம்

விருதுநகரை சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலர் சுனிதா:-

வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களை முறையாக பராமரிக்காமல் அவற்றிற்கு நோய் தொற்று ஏற்பட்டவுடன் அவர்கள் அந்த நாய்களை வீட்டை விட்டு வெளியே விரட்டியவுடன் அவை தெருநாய்களாக உருவெடுத்து விடுகிறது.

வெளிநாடுகளில் நாய்களுக்கு கருத்தடை செய்து வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற சட்டமே உள்ளது. ஆனால் இங்கு அவ்வாறு இல்லாத நிலையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தாமல் அவற்றை பராமரிக்க முடியாமல் தெருக்களில் விடுவதால் அவை தெரு நாயாக அலைவதன் மூலம் சில நேரங்களில் வெறிபிடித்து தெருவில் செல்பவர்களை கடித்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டம் ஒரு புறம் இருந்தாலும் அதனை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கடைப்பிடித்து நாய்களுக்கு கருத்தடைசெய்ய முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது கூட எனது வீட்டில் கொண்டு வந்து சில நாய்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். அவை முறையாக பராமரிக்கப்படாததால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே நாய்களை வீட்டில் வளர்ப்போர் முறையாக கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி அவற்றை பராமரிக்க வேண்டும் என்ற சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கடேஷ்:-

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே நிற்கும் மோட்டார் சைக்கிள்கள் சீட்டை கடித்து குதறி விடுவதுடன், காலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்களையும் துரத்துகிறது. நான் நடை பயிற்சிக்கு செல்லும் போது வீட்டில் வளர்க்கும் நாயையும் உடன் அழைத்து செல்வேன். அவ்வாறு செல்லும் போது தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து வளர்ப்பு நாயையும் துரத்துகிறது.

இதனால் என்னுடைய உயிரையும், வளர்ப்பு நாய் உயிரையும் காப்பாற்ற போராட வேண்டியுள்ளது. எனவே நடைபயிற்சி செல்பவர்களுக்கு நாய் தொல்லை இல்லாமல் இருக்க நகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த தம்பதி தினேஷ்குமார்-ஐஸ்வர்யா:-

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனவே நாங்கள் இருவரும் தினமும் நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றோம். அதிகாலையில் நடைபயிற்சி செல்லும்போது ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தால் இருட்டில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக நாய்களின் தொல்லையால் பெரிதும் அவதிப்படுகிறோம். நாய்களை கட்டுப்படுத்தி நிம்மதியாக நடைபயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story