மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?


மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என திட்டக்குழு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி

திட்டக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சிக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது:-

காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?, சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா? என திட்டக்குழு உறுப்பினர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

கலைஞர் உரிமைத்தொகை தகுதி உள்ளவர்களுக்கு ஒரே நாளில் வங்கி கணக்கில் சென்றடைந்துள்ளது. சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடியால் உரிமைத்தொகை வரவில்லை. எனவே தகுதி உடையவர்கள் 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்து பயன் பெறலாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளதா?. அரசு பள்ளிகள் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு அலுவலகங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா? என கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி உணவு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, புதிதாக தொடங்கப்பட்ட வளமிகு வளர்ச்சி திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், கல்வராயன்மலை ஆகிய 2 ஒன்றியங்களை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தங்கம், செயலாளர் முரளிதரன், வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், உதவி திட்ட அலுவலர் சவிதா, திட்டக்குழு உறுப்பினர்கள் முருகேசன், செண்பகவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story