அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு


அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x

அரியலூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை ராஜேந்திரனின் மருமகன் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலையில் இந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இதில் ஆறு பேர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடிப்பொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கீழப்பழூர் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்த இருவரும் கீழப்பழூர் காவல் நிலையத்தில் வக்கீல் முத்துக்குமார் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் கீழப்பழூர் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story