தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது
மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் திருட்டு
மடத்துக்குளத்தை அடுத்த கருப்புசாமிபுதூர், மைவாடி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில், மின் மோட்டார்களில் உள்ள காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் மைவாடி பகுதியில் தனியார் ஆலையில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போன் திருடியவனை கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒயர் திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவனை தனிப்படையினர் தேடி வந்தனர்.
உல்லாசம்
இந்தநிலையில் மடத்துக்குளம் பைபாஸ் சாலை ஆற்றுப்பாலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் சந்தேகத்துக்கிடமான நபர் பயணம் செய்தார். அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்று மடக்கிய போலீசார் அதில் கட்டிங் பிளேயர் உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பதை கண்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மடத்துக்குளம் கே.டி.எல். பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மகன் முருகானந்தம் (வயது 26) நண்பர்கள் உதவியுடன் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நண்பர்கள் பகல் நேரத்தில் கட்டிட வேலைக்கு செல்வது போல மோட்டார் சைக்கிளில் சென்று நோட்டமிட்டு, இரவு நேரத்தில் சரக்கு ஆட்டோவில் சென்று ஒயர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருட்டில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
4 பேர் கைது
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட முருகானந்தத்தின் நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம் தாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36), வயலூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 22) மற்றும் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, மோட்டார்சைக்கிள், மொபட், 1¾ பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம், கண்காணிப்பு கேமராக்கள், காப்பர் ஒயர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் மடத்துக்குளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.