லாரியில் அதிக அளவில் கால்நடைகளை ஏற்றி வந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43), இவர் மிருக நலவாரிய அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சிவக்குமார் சம்பவத்தன்று, தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அவர் நிறுத்தி சோதனை செய்தார். அந்த லாரியில், 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள் மற்றும் 3 கன்றுகுட்டிகள் கால்நடைகளை சித்ரவதை செய்து அடைத்து கொண்டு வந்தது தெரிந்தது.இதுகுறித்து சிவக்குமார் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த வியாபாரி முகமதுஉஸ்மான் (45) மற்றும் கிருஷ்ணகிரி அவ்வை நகரைச் சேர்ந்த டிரைவர் பைரோஸ்அம்ஜத் (37) என்பதும், லாரியில் கேரளாவுக்கு கால்நடைகளை அடைத்து ஏற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.