பரமத்திவேலூர் அருகே, பட்டாவில் பெயர் நீக்கம் செய்யரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பெண் அதிகாரி கைது
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கிராம நிர்வாக அலுவலர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி தீபா (வயது 43). இவர் எஸ்.கொந்தளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (45). விவசாயி. இவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடரை தடவி அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
கைது
அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த தீபாவிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய தீபாவை கைது செய்தனர். மேலும் அவருடைய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை விசாரணைக்காக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ரூ.25 ஆயிரம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.