தர்மபுரியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்பெண்கள் உள்பட 416 பேர் கைது
தர்மபுரி:
மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
தர்மபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்க்குமரன், மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கமலாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு, மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது, மணிப்பூர் மற்றும் அரியானாவில் மதக்கலவரத்தை தூண்டி பொது மக்களை படுகொலை செய்வது உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
416 பேர் கைது
இந்த மறியல் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபால், காதர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 196 பெண்கள் உட்பட 416 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.