தர்மபுரியில்டவுன் பஸ்களில் நகை திருடிய 3 பெண்கள் கைது


தர்மபுரியில்டவுன் பஸ்களில் நகை திருடிய 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 29 Sept 2023 12:30 AM IST (Updated: 29 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் டவுன் பஸ்களில் 2 பெண்களிடம் நகை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மாயம்

தர்மபுரி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 55). அதகப்பாடி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தர்மபுரி டவுன் பஸ் நிலையத்துக்கு வந்தார்.

அங்கிருந்து பரிகம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகே இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது. பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

3 பெண்கள் கைது

இதேபோல் பாப்பாரப்பட்டியை சேர்ந்த ரோஜாவதி (55) தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் தர்மபுரி 4 ரோடு பகுதியில் பாப்பாரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜாவதி இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நகை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தர்மபுரி டவுன் பஸ் நிலையம் மற்றும் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் பஸ் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மீனாட்சி (30), சாந்தி (38), பிரியா (29) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் ஓடும் பஸ்சில் பரிமளா மற்றும் ரோஜாவதி ஆகியோரிடம் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story