துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல் கைது


துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல் கைது
x

துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓமலூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த போது சிக்கினர்.

சேலம்

ஓமலூர்:

ஜவுளிக்கடை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சரவணன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜவுளி விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் சிங் (30), தசீப்சிங் (33), கைலாஷ் குமார் (30), அகமதாபாத்தை சேர்ந்த அசோக்குமார் சான் பால் (44) ஆகியோரிடம் ரூ.59 லட்சத்துக்கு ஜவுளி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

4 பேர் கைது

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவருடன் சேர்ந்து மேற்கண்ட 4 பேரும் கடந்த 22-ந் தேதி மாலை ஒரு காரில் சரவணனை ராஜபாளையத்துக்கு கடத்திச்சென்று, ஒரு ஓட்டலில் தங்க வைத்தனர். பின்னர் அந்த கும்பல் அவரை ஓமலூருக்கு கடத்தி வந்து, ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது.

இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பிய சரவணன், லாட்ஜ் மேலாளரிடம் தன்னை ஒரு கும்பல் கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்ஜில் தங்கி இருந்த லட்சுமணன் சிங், தசீப்சிங், கைலாஷ் குமார், அசோக் குமார் சான்பால் ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அம்பேத்கரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story