சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி மோசடி புகார்:தர்மபுரி உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனைஉரிமையாளர்கள் 2 பேர் கைது


சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி மோசடி புகார்:தர்மபுரி உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனைஉரிமையாளர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தர்மபுரி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் முதலீடு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்தவர்கள் அருண்ராஜா (வயது 37), ஜெகன் (39). அண்ணன், தம்பிகளான இவர்கள் 2 பேரும் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1,800 வீதம் 100 நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.

இதை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து முதலீடு செய்தனர். முதலீடு செய்த பணத்தை ரியல் எஸ்டேட், டிரேடிங் உள்ளிட்டவைகளை செய்து லாபம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் வரை முதலீடு செய்தவர்களுக்கு தொகையை வழங்கியதாக கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் புகார்

அதன்பின்பு அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஓசூர் ஏலகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிளை அலுவலகங்களும் மூடப்பட்டன. இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் 1,000 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பணத்தை மீட்டு தரகோரியும், அருண்ராஜா, ஜெகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் சோதனை

இதையடுத்து தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு பூனையானூரில் உள்ள வீட்டில் அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

விசாரணையை தொடர்ந்து நேற்று நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தர்மபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் பூனையானூரில் உள்ள அருண் ராஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சில ஆவணங்கள், ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கூட்டர், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல் தர்மபுரியில் உள்ள தலைமை அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ஓசூர், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள கிளை அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

2 பேர் கைது

இதை தொடர்ந்து மோசடி, தமிழ்நாடு சிறப்பு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர். உரிய விசாரணைக்கு பின் கோவையில் உள்ள முதலீட்டாளர் சிறப்பு கோர்ட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story