பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

அரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அரூர்
பணம் வைத்து சூதாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் பணம் வைத்து சூதாடும் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது மத்தியம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளிய மரத்தின் கீழ் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் கும்பலாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.
7 பேர் கைது
இது தொடர்பாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர்கள் அரூர் பகுதியைச் சேர்ந்த மணி (வயது 42), மாயக்கண்ணன் (42), பிரவீன் ராஜ் (29), கோவிந்தன் (42), மாதேஷ் (36), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (32), மனோ பாரதி (32) என்பது தெரியவந்தது.
அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு, ரூ.3,750 தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அவர்கள் சூதாடும் இடத்திற்கு வந்து செல்ல பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






