அரூரில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த கணவன்-மனைவி போக்சோவில் கைது


அரூரில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த கணவன்-மனைவி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 25 Jun 2023 1:00 AM IST (Updated: 26 Jun 2023 10:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

மாணவியை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுத்த கணவன்-மனைவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

படம் எடுத்து மிரட்டல்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதேபகுதுயை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவருடைய மனைவி தெய்வானை (20). இவர்கள் அந்த மாணவியிடம் நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வானை அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்று உள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வன் வீட்டின் கதவை சாத்திவிட்டு மாணவியை ஆடைகளை அவிழ்க்கும்படி மிரட்டி உள்ளார். ஆனால் அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் ஆடைகளை அவிழ்க்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில்...

இதனால் பயந்து போன மாணவி ஆடைகளை அவிழ்த்துள்ளார். இதையடுத்து அவர் தனது செல்போனில் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். சில நாட்கள் கழித்து மாணவியிடம் தமிழ்ச்செல்வன் எனக்கு நீ பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்

இதனால் பயந்து போன மாணவி தனது வீட்டில் இருந்து 6 பவுன் நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து தமிழ்செல்வனிடம் கொடுத்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆடைகள் இல்லாமல் தன்னிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்று மாணவியை மிரட்டி தமிழ்ச்செல்வன் அவ்வாறு பேச வைத்துள்ளார்.

கணவன்-மனைவி கைது

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரி பார்த்தனர். அப்போது நகைகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து அரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், அவருடைய மனைவி தெய்வானை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போக்சோ வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story