திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு


திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 28 Jun 2023 9:00 PM GMT (Updated: 30 Jun 2023 10:39 AM GMT)

பெண் தற்கொலை வழக்கில் ஆஜராகாததால் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

நீலகிரி

ஊட்டி

பெண் தற்கொலை வழக்கில் ஆஜராகாததால் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

தற்கொலை வழக்கு

நீலகிரி மாவட்டம் தேவாலா அருகே பெருங்கரையில் உள்ள உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு திடீரென தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நாகேஷ் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு விசாரணை, ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஆஜராகவில்லை

இந்த வழக்கு விசாரணை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சாட்சிகளிடம் விசாரணை முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் வழக்கு விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி, ஊட்டி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டி உள்ளது.

இது தொடர்பாக தற்போது திருப்பூர் சைபர் கிரைம் பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் அவருக்கு, 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

பிடிவாரண்டு

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்தார்.

இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்த கிருஷ்ணசாமி நேற்று பணிக்கு வந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story