திருச்சி ரவுடி குண்டா் சட்டத்தில் கைது
மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய வழக்கில் திருச்சி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ரவுடி கைது
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, புலிவலம் அருகே உள்ள கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் துரைசாமி என்கிற பிரசாந்த் (வயது28). ரவுடியான இவர், கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கரூர் மாவட்டம், நெய்தலூர் காலனி சின்ன கவுண்டம்பட்டி பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தகாத வார்த்தையால் திட்டினார்.பின்னர் அவரை அரிவாளால் வெட்டியும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, துரைசாமியை கைது ெசய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
துரைசாமி பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணுவதற்கு பாதகமான செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து துரைசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குளித்தலை போலீசார் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டரின் பரிந்துரை படி, துரைசாமி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.