கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்


கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்று (திங்கட்கிழமை) மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

பெரம்பலூர்

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்ததும் ஒவ்வாரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத்தொகை அனுப்பப்பட்டது.

குறுஞ்செய்தி

தமிழகம் முழுதும் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள். அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தின் முடிவின் தன்மை குறித்து விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக இன்று (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்படும். மேலும், விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளும் வகையிலும், வங்கி சார்ந்த குறைகள், விவரங்கள் பெறும் வகையிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையம் நிறுவப்பட்டுள்ளன.

இ-சேவை மையங்கள்

இத்திட்டத்தின் கீழ் ஏற்கப்படாத விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்து கொள்ள விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு விண்ணப்பம் தாக்கல் செய்திடலாம். மேல்முறையீடு விண்ணப்பங்கள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியாக மட்டுமே பெறப்படும். மேல்முறையீடு விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ஆர்.டி.ஓ.வால் இறுதி செய்யப்படும்.

இறுதி செய்யப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக பெறப்படும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் குறுஞ்செய்தி அதிகளவில் பெறப்பட்ட அதன் முழு சேமிப்பு திறன் எய்தப்பட்டால், குறுஞ்செய்தி பெற இயலாது. எனவே, தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்கம் செய்து குறுஞ்செய்தி சேமிப்பில் தேவையான வசதி வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் எவரும் இடைத்தரகர்களையோ அல்லது பிற நபர்களையே தொடர்பு கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். கார்டின் கடவுச்சொல்லை தெரிவிக்க கூடாது

கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக எந்த அரசு அலுவலகங்களில் இருந்தும் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு விவரம் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் கோரப்படமாட்டாது. பயனாளியின் செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைப்பு வந்து, ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) அல்லது ஏ.டி.எம். கார்டு அட்டை எண் அல்லது பின்புறம் உள்ள 3 இலக்க எண் ஆகியவற்றினை யாரேனும் கேட்டால், அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம். இவ்வாறான அழைப்புகள் மூலம் பயனாளியின் வங்கி கணக்கில் உள்ள தொகை திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான அழைப்புகளுக்கு எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story