ஆரிய - திராவிட இனவாதம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று - வானதி சீனிவாசன்
தமிழர்களை திராவிடர்கள் என்று அழைப்பதைக் காட்டிலும் தமிழ் மொழி, தமிழர்களுக்குச் செய்யப்படும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை,
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னையில் நேற்று (27.10.2023) நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் - இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரசாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது. தயவு செய்து இங்கே இருக்கக்கூடிய கவர்னரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம் என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரியைக் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள். இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை" என பேசியிருக்கிறார்.
திமுகவின் கொள்கை ஆசான், மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பற்றி தமிழ்நாடு கவர்னர் பேசியதிலிருந்து திமுகவினரிடம் ஒருவித பதற்றத்தைப் பார்க்க முடிகிறது. மதமாற்ற வந்த அன்னிய சக்திகள் போட்ட விதைதான் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகி, இப்போது திமுகவாகி இருக்கிறது என்ற உண்மை, சாதாரண மக்களிடமும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம் திருமண வீட்டில் கூட முதல்-அமைச்சரின் நிம்மதியை குலைத்திருக்கிறது.
என் மனைவி கிறிஸ்தவர் என பகிரங்கமாக பிரகடனம் செய்த முதல்-அமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை ஒழிப்பேன் என பேசியது, தமிழ்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதை மறைக்க திமுகவினர் எது எதையோ செய்து கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் ஆதி வரலாற்றையெல்லாம் கவர்னர் பேசினால் திமுகவினருக்கு பதற்றம் வரத்தான் செய்யும்.
அதனால்தான் இதுவரை கவர்னரை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மனு கொடுத்து கொண்டிருந்தவர்கள், கூட்டணி கட்சிகளை விட்டு கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள், இப்போது கவர்னரை மாற்றி விடாதீர்கள் என பேசி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுகவினரின் இந்த நிலை பரிதாபமாக இருக்கிறது. கவர்னர் பேசுவது திமுகவுக்கு சாதகம் என்றால், கல்யாண வீட்டில் கூட கவர்னரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்?
'ஆரிய - திராவிட இனவாதம்' என்பது மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பரப்பிய கட்டுக்கதை. ஆரிய - திராவிட இனவாதம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.
ஆரிய - திராவிட இனவாதம் பேசி குறுகிய அரசியல் செய்யும் திமுகவினர், ஆரியர்கள் யார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும். திமுகவால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னை பூணூல் அணிந்த பிராமணர் என்று பகிரங்கமாக அறிவித்தவர். அவர் ஆரியரா? திராவிடரா? ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்மணி திரெளபதி முர்முவை ஆதரிக்காமல், திமுக ஆதரித்த யஷ்வந்த் சின்கா ஆரியரா? திராவிடரா?
திமுக கூட்டணி வைத்துள்ள மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம் ஆரியர்களா? இல்லையா என்பதை திமுக தெளிவுப்படுத்த வேண்டும்.
திராவிடம், திராவிடர் என்று சொல்லிக் கொண்டே, திமுக ஆட்சிக்கு வர காரணமான எம்.ஜி.ஆரை, 'மலையாளி' என்றும், கால் நூற்றாண்டு காலம் திமுகவை தூங்க விடாமல் செய்த ஜெயலலிதாவை, 'கன்னடர்' என்றும், கருணாநிதியின் வாரிசான மு.க.ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடத்துவதை எதிர்த்தார் என்பதற்காக வைகோவை, 'கலிங்கப்பட்டி தெலுங்கர்' என்றும் ஏளனம் செய்தவர்கள், இன்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். இதைவிட பச்சையான சந்தர்ப்பவாதம் இருக்க முடியாது.
இப்படி சந்தர்ப்பவாத அரசியலுக்காக திராவிடம், திராவிடர் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழ்நாடு என்பதை திமுக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்களை திராவிடர்கள் என்று அழைப்பதைக் காட்டிலும் தமிழ் மொழி, தமிழர்களுக்குச் செய்யப்படும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் இப்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான வரலாற்றை படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இனி திமுகவின் கட்டுக்கதைகள் மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.