சாலையோரம் அமைந்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை


சாலையோரம் அமைந்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
x

வீரகநல்லூர் கிராமத்தில் சாலையோரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரகநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 90-க்கும் ஏற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு வளாகத்திலும், 6-ம் முதல் 8-ம் வகுப்பு வரை மற்றொரு வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது.

இதில் 5-ம் வகுப்பு வரை செயல்படும் வளாகத்தில் பள்ளி சுற்றுச்சுவர் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், கடந்த ஆண்டு இடிந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

இந்நிலையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டி திருத்தணி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. சாலையோரத்தில் பள்ளி அமைந்துள்ளதாலும், இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் சிலர் பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து விட்டு செல்வதாலும் மாணவ - மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் நலன் காக்க வீரகநல்லூர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story