தூத்துக்குடியில்பழிக்குப்பழியாகதொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
தூத்துக்குடியில்பழிக்குப்பழியாக தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்து கோவில் முன்பு வைத்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரத்தக்கறையுடன் கிடந்த பை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் சலவைக்கூடம் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் கோவில் முன்பு நேற்று காலை ரத்தக்கறையுடன் ஒரு பை கிடந்தது. அந்த வழியாக சென்ற மக்கள் பையை பார்த்துள்ளனர். அதில் மனித தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.
உடலை கண்டுபிடித்தனர்
அந்த பகுதியில் உடல் கிடக்கிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கு கிடைக்கவில்லை.
தூத்துக்குடி 4-வது கேட் அமைந்துள்ள மையவாடி பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். உடலில் ஒரு சில இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. உடனடியாக போலீசார் தலை மற்றும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
தொழிலாளி
மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சண்முகத்தின் மகன் சுமை தூக்கும் தொழிலாளியான மாரியப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 23.4.23 அன்று அண்ணாநகர் சலவைக்கூடத்தில், தனது நண்பர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பையா மகன் சப்பாணிமுத்து (43) என்பவருடன் மது குடித்துள்ளார். அப்போது சப்பாணிமுத்து, மாரியப்பன் கழுத்தில் அணிந்து இருந்த மாலையை அறுத்து விட்டதாகவும், அவரது தாயை பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஜாமீனில் வந்தார்
இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாரியப்பன் அருகில் கிடந்த கல்லை தூக்கி தலையில் போட்டு சப்பாணிமுத்துவை கொலை செய்து விட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் மாரியப்பன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதனை கண்காணித்த சப்பாணிமுத்துவின் ஆதரவானவர்கள் பழிக்குப்பழியாக மாரியப்பனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
தலை துண்டித்துக்கொலை
நேற்று காலை மாரியப்பன் மையவாடி பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அவரது தலையை துண்டித்தனர். அந்த தலையை சப்பாணிமுத்து கொலை செய்யப்பட்ட அண்ணாநகர் சலவைக்கூடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வைத்து விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.