காவிரிப் பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை மதிப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முத்தரசன்


காவிரிப் பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை மதிப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முத்தரசன்
x

காவிரிப் பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை மதிப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பு வேளாண் பருவத்தில் மேட்டூர் அணை முன் கூட்டியே பாசனத்திற்கு திறக்கப்பட்டதாலும், இயற்கை ஒத்துழைத்ததாலும் சம்பா பருவ சாகுபடி நல்ல விளைச்சல் தந்தது. இதில் கதிர்கள் முற்றி அறுவடை தொடங்கியுள்ள நேரத்தில், நேற்று முன்தினம் (01.02.2023) இரவு பெய்த பெருமழையால் விளைந்து நின்ற சம்பா பயிர்கள் கடுமையாக சேதமாகியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த

50 ஆயித்துக்கும் அதிகமான பரப்பளவு சாகுபடி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

கடந்த ஒரு மாதமாக இருந்த கடுமையான பனிப் பொழிவில் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போது மழையும் சேர்ந்து கொண்டது பெரும் சேதத்துக்கு காரணமாகிவிட்டது. நெல் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இன்னும் சில நாட்களுக்கு அறுவடைக்கு தொழிலாளர்கள் இறங்குவதோ, இயந்திரங்கள் இறக்கப்படுவதோ இயலாது.

சம்பா அறுவடை முடிந்ததும் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வது வழக்கமாகும். அதற்கும் தற்போது வாய்ப்பில்லை என்பதால் நடப்பாண்டில் நன்கு விளைச்சல் இருந்தும் அதன் பயனை பெற முடியாமல், பருவம் தவறிய மழையால் "கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை" என்ற துயர நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரிப் பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மதிப்பீடு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான அளவில் இழப்பீடு கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story