ஆனைக்கல்பாளையத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
ஆனைக்கல்பாளையத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தினா்
ஈரோடு பூந்துறை மெயின் ரோட்டில் உள்ள ஆனைக்கல்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகர செயலாளர் சுப்ரமணியம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொதுமக்களிடம் 2 லட்சம் கையெழுத்துகளை பெற்று போராட வேண்டும்' என்றார். இதில் ஈரோடு தெற்கு தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமண குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.