கந்தர்வகோட்டை கோர்ட்டில் 6 பேர் சரண்


கந்தர்வகோட்டை கோர்ட்டில்   6 பேர் சரண்
x

தஞ்சை ரவுடி கொலை வழக்கில் கந்தர்வகோட்டை கோர்ட்டில் 6 பேர் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை

கொலை வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் திப்புராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்கிற ஓணான் செந்தில். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் சின்னப்பா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக கடந்த 5-ந் தேதி திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜராவதற்காக கும்பகோணம் திப்பு ராஜபுரத்தில் இருந்து திருவாரூருக்கு காரில் சென்றார்.

பின்னர் விசாரணை முடிந்ததும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை ஓணான் செந்தில் ஓட்டினார். காரில் வக்கீல்கள் கும்பகோணத்தை சேர்ந்த அகிலன், மயிலாடுதுறையை சேர்ந்த பாரதிராஜா ஆகியோரும் உடன் வந்தனர்.

ரவுடி கொலை

நாகலூரில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார், ஓணான் செந்தில் ஓட்டி வந்த காரை மறித்து நின்றது. இதையடுத்து ஓணான் செந்தில் காரில் இருந்து இறங்கி ஓடினார். அப்போது காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

6 பேர் சரண்

இந்தநிலையில், ஓணான் செந்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வலங்கைமான் பகுதியை சேர்ந்த குணா என்கிற ராஜ்குமார் (வயது 32), ஜெயராஜ் (42), அருண் பாண்டியன் (32), முத்தையன் (36), கார்த்திகேயன் (34), தஞ்சையை சேர்ந்த கலியமூர்த்தி (42) ஆகிய 6 பேர் இன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரிசானா பர்வீன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரையும் போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story