ஈரோட்டில் உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை


ஈரோட்டில் உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை
x

ஈரோட்டில் உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

தக்காளி விலை உயர்வு

ஈரோடு மார்க்கெட்டுக்கு தாளவாடி பகுதியில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அங்கு தக்காளி விளைச்சல் குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சதம் அடித்த தக்காளி நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை ஆனது.

ஆப்பிளுக்கு போட்டியாக தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

ரூ.70-க்கு விற்பனை

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் சந்தைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று தக்காளியை போட்டி போட்டி அள்ளிச்சென்றனர். காலை 6.15 மணிக்கு தொடங்கி காலை 7.15 மணிக்குள் 250 கிலோ தக்காளி விற்றுத்தீர்ந்தது.

வரவேற்பு

இதேபோல் சத்தியமங்கலம் உழவர் சந்தையிலும் மலிவு விலையில் ரூ.70-க்கு 150 கிலோ தக்காளி நேற்று விற்பனை செய்யப்பட்டது. உழவர் சந்தையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்தது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஓசூரில் விவசாயிகளிடம் நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில் முதல் கட்டமாக ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை மற்றும் சத்தியமங்கலம் உழவர் சந்தையிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்தோம். ஒரு மணி நேரத்தில் இந்த 2 சந்தைகளிலும் 400 கிலோ தக்காளி விற்பனையானது. மக்களிடம் வரவேற்பு உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர், பெருந்துறை, கோபி, தாளவாடி உள்ளிட்ட உழவர் சந்தைகளிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்' என்றார்.


Related Tags :
Next Story