ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தை கடந்த மாதம் 29-ந் தேதி மர்ம நபர் ஒருவர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தாா்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் மேற்பார்வையில், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மா்ம நபரை தேடி வந்தனர்.

அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை போலீசார் முன் எடுத்தனர். இந்த நிலையில், சங்கராபுரம் ரிஜிஸ்டர் ஆபீஸ் பின்புறம் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக சங்கராபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததும் தெரிந்தது. மேலும் செலவுக்கு பணம் இல்லாததால், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.


Next Story