வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்
மோகனூர் அருகே வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள வளையபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 55). இவரது வீட்டில் மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், குடியிருக்கும் வீட்டில் மோகன்ராஜ் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து கொண்டும் இருந்தார். இதனால் வீட்டு உரிமையாளர் கருப்பண்ணன் வீட்டை காலி செய்ய சொன்னதால் மோகன்ராஜ் மீண்டும் குடிபோதையில் தகராறு செய்தார். இதை தட்டிக் கேட்ட கருப்பண்ணன், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியையும், அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகறிது. மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மோகனூர் போலீஸ் நிலையத்தில் கருப்பண்ணன் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், அவரது தம்பி காளிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.