அரசுப் பேருந்து நிற்காததைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல்


அரசுப் பேருந்து நிற்காததைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:45 PM GMT)

கெடார் அருகே அரசு பஸ் நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி

மாணவர்கள் மீது தாக்குதல்

விழுப்புரம் அருகே கெடாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கெடார், அதனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற அரசு பஸ்சில் அதனூருக்கு செல்ல கெடார் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறினர். அதனூர் பஸ் நிறுத்தம் வந்ததும் மாணவர்கள், கீழே இறங்க வேண்டும் என்று கண்டக்டரிடம் கூறியுள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதால் விரக்தியடைந்த மாணவர்கள், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் பஸ்சை நிறுத்தக்கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சக பயணி ஒருவர் மதுபோதையில், மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவனுக்கு கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதையறிந்ததும் அதனூரை சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மாலை 6 மணியளவில் அதனூர் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் மாணவர்களை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராடத்தை கைவிடமாட்டோம் என்றனர். பின்னர், அங்கு வந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா முறையாக புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் இரவு 7.15 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story