போக்குவரத்து போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்


போக்குவரத்து போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்
x

போதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர்கள் மீது வழக்கு போட முயன்ற போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேரை தாக்கிய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை

மதுரை

போதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர்கள் மீது வழக்கு போட முயன்ற போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேரை தாக்கிய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீசார் மீது தாக்குதல்

மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் தலைமையில் போலீசார் அருள்ராஜ், ராமராஜ் ஆகியோர் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்களிடம் பேசும்போது, அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே அதற்கு வழக்கு போட போலீசார் முடிவு செய்தனர்.

அதை அறிந்த ஆட்டோவில் இருந்த 4 பேரும் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு சென்று விட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் மீண்டும் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை நிறுத்திய போக்குவரத்து போலீசார் அருள்ராஜ், ராமராஜ் ஆகியோரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலீசாரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 3 பேர் தப்பிக்க ஒருவர் மட்டும் சிக்கினார். இதில் காயம் அடைந்த 2 போலீசாரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

இதற்கிடையில் பிடிபட்ட ஒருவரை கரிமேடு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் நாகமலைபுதுக்கோட்டை மேலகுயில்குடி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரதிராஜா(வயது 36), கட்டிட தொழிலாளி முத்துராமன் (21) மற்றும் அவரது நண்பர்கள் சர்க்கரை, வேல்முருகன் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவில் மது அருந்தி உள்ளனர். பின்னர் காலையில் ஆட்டோவில் காளவாசல் பகுதியில் வந்த போது தான் இந்த தகராறு ஏற்பட்டது என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து தப்பி சென்றவர்களை பிடிக்க கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சங்கர் தலைமையில் போலீசார் தேடிய போது பாரதிராஜா மட்டும் சிக்கினார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாரதிராஜா, முத்துராமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

நடுரோட்டில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story