மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாத அண்ணனை கொல்ல முயற்சி
ஏற்காடு அருகே மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாத அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு:-
ஏற்காடு அருகே மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாத அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது செய்யப்பட்டார். காட்டெருமை தாக்கியதாக நாடகமாடியது தெரிய வந்தது.
வாலிபர் காயம்
சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் (வயது 26). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோர பள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வினோத் காட்டெருமை தாக்கி காயம் அடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், வினோத், காட்டெருமை தாக்கி காயம் அடையவில்லை என்றும், அவர் தாக்கப்பட்டதால் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. காயம் அடைந்த வினோத் சுயநினைவு இல்லாமல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பி மனைவியுடன் கள்ளக்காதல்
இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர். அப்போது வினோத்தின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, வினோத்துக்கும், அவருடைய தம்பி விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. அதாவது, திருமணத்துக்கு முன்பே வெண்ணிலாவும், வினோத்தும் காதலித்து வந்ததாகவும், தம்பியின் திருமணத்துக்கு பிறகும் வெண்ணிலாவுடன் வினோத் பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். விவேக் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த விவேக், தன்னுடைய மனைவியை கண்டித்ததுடன், அண்ணன் வினோத்தையும் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்படவே சம்பவத்தன்று வெண்ணிலாவை அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு விவேக் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
நாடகம்
எஸ்.புத்தூர் பகுதியில் விவேக்கும், வினோத்தும் சந்தித்துள்ளனர். அப்போது விவேக்கிடம், உன்னுடைய மனைவி எங்கே என்று வினோத் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த விவேக், அங்கு கிடந்த கல்லை எடுத்து வினோத்தை தாக்கி உள்ளார்.
இதில் வினோத் மயக்கம் அடையவே அங்குள்ள சாலையோர பள்ளத்தில் விவேக் தள்ளி விட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். உறவினர்களிடம் காட்டெருமை தாக்கி அண்ணன் காயம் அடைந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த தகவல் அம்பலமாகி உள்ளது.
கைது
தொடர்ந்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் விசாரணை நடத்தி விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விவேக்கை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விவேக்கின் மனைவி வெண்ணிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணனை தாக்கி விட்டு காட்டெருமை தாக்கியதாக நாடகமாடிய தம்பி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.