புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி


புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
x

சென்னை ராஜமங்கலத்தில் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றார்.

சென்னை

சென்னை கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் முதல் தெருவை சேர்ந்தவர் வத்சலா (வயது 70). இவர், தன்னுடைய மகன் பிரதாப், மருமகள் ஜான்சி(41) ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களான கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் வத்சலா வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்தனர். பின்னர் அந்த போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் உள்ள வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. தற்போது வட்டியும், அசலுமாக ரூ.1 கோடியே 30 லட்சம் வந்ததால் கடன் வழங்கிய வங்கி, வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வத்சலா குடும்பத்தினர் இந்த மோசடி குறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று வத்சலா, தனது மகன் பிரதாப், மருமகள் ஜான்சி ஆகியோருடன் ராஜமங்கலம் போலீஸ் நிலையம் சென்று புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டனர்.

அப்போது திடீரென ஜான்சி தயாராக வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி, போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரை தடுத்த போலீசார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி 3 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story