கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு..! - ஐபிஎல் பிளேஆப் போட்டிகளை காண மெட்ரோவில் டிக்கெட் அவசியம்..!


கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு..! - ஐபிஎல் பிளேஆப் போட்டிகளை காண மெட்ரோவில் டிக்கெட் அவசியம்..!
x

சென்னையில் ஐபிஎல் பிளேஆப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் ரசிகர்கள் டிக்கெட் எடுப்பது அவசியம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ ரெயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சென்னை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளேஆப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரெயில் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இடையூறு இல்லாத பயணத்திற்கு, பயணிகள் மெட்ரோ ரெயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஏனெனில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது. சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாறிகொள்ளலாம். ஏனெனில் நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு பயணிகள் மாறும் வசதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு பிறகு இருக்காது.

ஆகையால் நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story