ஊத்துக்கோட்டை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த ஆட்டோ டிரைவர் கைது
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தாலி சங்கிலி பறிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர் பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி பாரதி (வயது 50). இவர் சீதஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி மாலை சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் நிற சட்டை, கருப்பு கலர் பேண்ட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் பாரதி கழுத்தில் இருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
டிரைவர் கைது
இது குறித்து பாரதி பென்னாலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் பாரதியின் தாலி சங்கிலியை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ரமேஷை கைது செய்தனர். ரமேஷ் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் ஆந்திராவில் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். போலீசார் ரமேஷை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.