சென்னை பெசன்ட் நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை - மனைவியை அபகரித்ததால் கணவர் வெறிச்செயல்


சென்னை பெசன்ட் நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை - மனைவியை அபகரித்ததால் கணவர் வெறிச்செயல்
x

சென்னை பெசன்ட்நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். மனைவியை அபகரித்ததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை புதுப்பேட்டையில் சாலையோரம் வசித்து வருபவர் பாஷா என்ற சையது முகமது பாஷா (வயது 26). இவரைவிட இவருடைய மனைவி அமுதா, 4 வயது மூத்தவர். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், பாஷா அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால், அமுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்கரை முகம்மது (32) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளையும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள தனது சித்தியிடம் அமுதா ஒப்படைத்திருந்தார். அவ்வப்போது வந்து குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓடைக்குப்பத்துக்கு தனது குழந்தைகளை பார்ப்பதற்காக அமுதா வந்தார். அப்போது, அவரது 2-வது கணவர் சக்கரை முகமது, அமுதாவை பின் தொடர்ந்து வந்து அவரிடம் தகராறு செய்து அவரை அடித்துவிட்டு, பெசன்ட் நகர் ஸ்கேட்டிங் மைதானத்தில் தூங்கிவிட்டார்.

இந்த தகவலை கேள்விப்பட்ட முதல் கணவர் பாஷா, நேற்று காலை சக்கரை முகமதுவுடன் தனது மனைவியை அபகரித்தது தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த பாஷா, கீழே கிடந்த கற்களை எடுத்து சக்கரை முகமது மீது தூக்கி வீசி சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரை முகமது பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார் தலைமறைவாக இருந்த பாஷாவை தேடிப்பிடித்து கைது செய்தனர். பாஷா மீது 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story