அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சாதி, மத பாகுபாடின்றி நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகள் சங்க நிவாகிகள் நடத்தி வந்தனர். அவ்வாறு நடத்த கூடிய ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி, மத மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சாதி, மத பாகுபாடின்றி நடத்த வேண்டும். மேலும், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.