சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருது; கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த பயண கூட்டாளர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என்பன உள்பட 17 வகைப்பாடுகளில் 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இத்தகைய விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும். எனவே தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் இந்த விருது பெற www.tntourismawards.com என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.