சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பையை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு

44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டி தொடங்க இருப்பதையொட்டி பொதுமக்களுக்கு சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பையை வழங்கி கலெக்டர் மோகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
விழுப்புரம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்கலெக்டர்அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி இலச்சினை மற்றும் சின்னம் அச்சிட்ட மஞ்சப்பையை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மகிழ்ச்சி அடைய வேண்டும்
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்தமாதம்(ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட விளையாட்டுத்துறையின் மூலம் மாணவர்களுக்கு செஸ்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு செஸ் ஒலியம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பை வழங்கப்படுகிறது. இதன் நோக்கம், உலகளவிலான செஸ் போட்டியானது தமிழத்தில் நடைபெறுகிறது என்பது எல்லோரிடமும் சென்றடைந்து வரவேற்பும், மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதே ஆகும்.
சிறப்பு தன்மை குறித்து
அந்த வகையில், மாணவ-மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவரவா்களுக்கு ஏற்றாற்போல், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்புத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரகவளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம், நகராட்சி ஆணையர் சுரேந்திராஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.






