அயோத்தி ராமர் கோவில்; அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்


அயோத்தி ராமர் கோவில்; அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
x

அனைத்தையும் தேர்தலோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த நாட்டில் எதுவுமே செய்ய முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை சுவரில் வரையும் நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"கேலோ இந்தியா போட்டிகள் துவக்க நிகழ்ச்சியை தமிழக அரசு முன்னெடுத்து நடத்தியது. அந்த வகையில் அரசு நிகழ்ச்சியில் பிரதமரும், முதல்-அமைச்சரும் கலந்துகொள்வது சாதாரணமானதுதான். இதில் கூட்டணி என்று சொல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.

அயோத்தி ராமர் கோவில் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர், அதற்காக ஒரு கமிட்டியை நீதிமன்றமே அமைத்தது. அந்த கமிட்டியினர் வேகமாக பணியாற்றியுள்ளனர். இதில் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை. மாநில அரசு சார்பில் சில உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்தையும் தேர்தலோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த நாட்டில் எதுவுமே செய்ய முடியாது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மூன்று மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தால், 5 மாநில தேர்தலுக்காக செய்ததாக கூறியிருப்பார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டுகிறார்கள்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக 22-ந்தேதி பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற அறிவிப்பு வந்தால் அதை நாங்கள் வரவேற்போம். பெரும்பான்மையான மக்கள் வணங்குகின்ற ராம பிரானுக்கான முக்கியமான நாளில் தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை."

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



Next Story